Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

பெருநாள் தொழுகை

0 comments
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986
தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426
முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616
பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610
மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

சம்மாந்துறை TJ

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை

0 comments
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

சம்மாந்துறை TJ

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)

0 comments
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.
எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

சம்மாந்துறை TJ

கூட்டு துஆ ஓதலாமா?

0 comments
கூட்டு துஆ என்றால் என்ன?

ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள்.குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம்.  கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும்,ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக  இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.

நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி )

நூல்: முஸ்லிம் (3541)

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )

நூல்: முஸ்லிம் (1573)


அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)

கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல்  வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள்,விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014

மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார்.ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.

‘ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி,இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.

சூரா யூனூஸ் 89ம் வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும் பார்த்து‘உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது’ எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அல்லாஹ்விடம்  பிரார்த்திக்கின்றார்கள். எனவே, மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க – துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இன்னொரு ஆதாரம்.

எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கூட்டு துஆவிர்க்கு எதிரான ஆதாரங்கள்

அல்லாஹ் தன் திருமறையில் , துஆ எப்படி கேட்க வேண்டும் என்று நமக்கு தெளிவாக கற்றுத் தருகிறான்.

உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர் ஆன் 7:205)

அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

”நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)

உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் ‘நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!‘என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4838)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)

சப்தமிட்டு ஒருவர் துஆ கேட்டு அதற்க்கு சப்தமாக ஆமீன் கூறுதல் நிச்சயமாக ரகசியமானதாக இருக்க முடியாது.இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.கூட்டு துஆ தமிழ் மக்களிடையே 99% அரபு மொழியிலேயே கேட்கப் பட்டு வருகிறது.அதில் 99% பேருக்கு அரபி தெரியாது.நாம் எந்த துஆவிற்க்கு ஆமீன் கூருகிறோமோ அதற்க்கு நமக்கே அர்த்தம் தெரிய வில்லை என்றால், எதற்காக நாம் துஆ கேட்க வேண்டும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்னொரு அவலத்தையும் கேளுங்கள் , யார் அந்த துஆவை சப்தமிட்டு அரபு மொழியில் மொழிகிராரோ அவருக்கே கூட அவர் என்ன துஆ செய்கிறார் என்று தெரியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது .இப்படி அர்த்தம் புரியாமல் துஆ கேட்பதிலும் அதற்க்கு ஆமீன் கூறுவதிலும் என்ன பணிவு இருக்க முடியும்.

பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)

அல்லாஹ் நம்மை ஆசொயோடு பிரார்த்தனை செய்யக் கட்டளையிடுகிறான்.பல பேர் கூடு துஆவில் தூங்கிக் கொண்டு ஆமீன் சொல்வதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.ஆகவே அல்லாஹ் குறிப்பிட்ட பணிவும் இதில் இல்லை ரகசியமும் இல்லை ஆசையும் இல்லை .
.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்" என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ மூஸா அஷ்அரீ(ரலி)

புகாரி 2992, 4205,6384,6409,6610,7386 முஸ்லிம்  4873
இந்த ஹதீஸ் திக்ருகளை பற்றி கூறப பட்டாலும்,அல்லாஹ் காது கேட்காதவன் இல்லை,அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.ஆகவே கூட்டு துஆ என்பது நிச்சயமாக ஒரு வழிகேடு,ஆகவே கூடு துஆவை நாம் புறக்கணிக்க வேண்டும்.

கூட்டு துஆவில் உள்ள பாதிப்பு

கூட்டு துஆவை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்து இருக்கிறார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம்.அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாததை செயல்படுத்தும் போதுதான் பல பாதிப்புகள் ஏற்படும்.கூட்டு துவாவில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் , கூட்டு துஆவில் கலந்து கொள்பவர், தான் தனியாக துஆ கேட்க தேவையில்லை என்று எண்ணுகிறார்.தன்னுடைய சொந்த தேவைகளை அவரவர் கேட்க முடியாத நிலைமை இங்கே ஏற்படுகிறது.துஆ கேட்பவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து ஆமீன் கூருபவர் , இனி தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற நிலையில் இருந்து ,துஆ கேட்பவர் தனக்கு குழந்தை வேண்டி துஆ செய்தால் சரியாக இருக்காது. நிச்சயமாக ஒருவருடைய தேவையை மற்றவர் அறிந்திருக்க மாட்டார்.அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா தேவைகளையும் என்னிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:188)

தொழுகையில் தாமதமாக சேர்ந்தவர்கள் கூட்டு துஆவினால் ஒழுங்காக தொழ முடியாத நிலையும் ஏற்படுகிறது.இரேண்டாவது ஜமாத் அமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.குர்ஆன் வசனங்கள் ஒதப் படும் போது நாம் அதை செவிமடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 7:204)

இப்படி இருக்க இரேண்டாவது ஜமாத்தில் குர்ஆன் வசனங்கள் ஓதப் படும்போது கூட்டு துஆவும் நடந்துக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.

மேலும் பர்லு தொழுகைக்கு பின் இமாமை கொண்டே  துஆ கேட்டு பழகிவிட்டதால் ஒரு சிலர் தமது  சொந்த விஷயங்கள், 3,7,40 ஆம் பாத்திஹா ,பெயர் வைப்பு , திருமணம் போன்றவற்றிற்கும் பயணம் செல்லும்போதும் , ,விருந்து ஆரம்பம் முடிவிலும்,மட்டுமல்லாது  ,நோன்பு,ஹஜ் போன்ற கடமையை செய்ய தொடங்கும்போதும்கூட  இமாமே நேரில் வந்து கூட்டு துஆ என்னும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத ஒரு பித் அத்தை செய்து நமக்கு துஆ செய்ய வாய்ப்பளிக்காமல் செய்து விடுகிறார் , நீங்கள் நன்குசிந்தித்து பார்த்தால் இந்த வழிகேடுகள்  அனைத்திற்கும் ஆரம்பம் எது என்று புரிந்துகொள்வீர்கள்
கூட்டு துஆ (சில )இமாம்களுக்கு வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகவே இருப்பதால் அதை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் எனவே இந்த பித் அதை தவிர்த்து நேரடியாக உள்ளச்சத்துடன்  இறைவனிடம் துஆ செய்து வருவதே நபி (ஸல்) காட்டி தந்த வழிமுறையாகும்.

விழிப்புணர்வு 

கூட்டு துஆவிர்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கூட்டு துஆவினால் ஏற்படும் விளைவுகளையும் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் கூட்டு துஆ ஒரு தெளிவான பித்அத் , நிச்சயமாக இது நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு செயலாக இருக்கிறது என்பதை இந்த தவறான செயலை செய்யக் கூடிய மக்களிடம் எச்சரிக்கை ஊட்ட வேண்டும்.  

சம்மாந்துறை TJ

லைலதுல் கத்ர்

0 comments
ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
லைலதுல் கத்ர் 27வது இரவா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

சம்மாந்துறை TJ