கடந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கப்பட்டது தொடர்பில் சில நாட்களாகவே பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது.
இதில் கடந்த 08 ம் தேதி இலங்கையின் கிண்ணியாவில் பிறை தென்பட்டதை அடிப்படையாக வைத்து கடந்த வியாழக்கிழமை (08.08.2013) அன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் பிறை பார்க்கும் மாநாட்டை கொழும்பு பெரிய பள்ளியில் கூட்டிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினரோ கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்க முடியாது என்று கூறி வியாழக்கிழமை நோன்பு நோற்குமாறும் வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடுமாறும் பொதுமக்களுக்கு வானொலி வாயிலாக அறிவித்தல் விடுத்தது.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிறை பார்க்கப்பட்ட ஊரான கிண்ணியா வாழ் மக்களும், கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமாவும் வியாழக்கிழமையே புனித நோன்புப் பெருநாளை கொண்டாடினார்கள்.
இதன் பின்னர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பிறை தொடர்பாக ஓர் உரையாற்றினார்.
அந்த உரையில் அன்று…
பிறை கிண்ணியாவில் தென்பட்டது என்பது பொய்.
கிண்ணியாவில் பிறை கண்டதாக நம்பி நோன்பை விட்டவர்கள் இப்போதே அதனை மீண்டும் பிடித்துக் கொள்ளுங்கள்.
கிண்ணியா பிறையை நம்பி நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியவர்கள் அல்லாஹ்விடம் இப்போதே தவ்பா செய்து கொள்ளுங்கள்.
வானியல் அடிப்படையில் இன்று (08 ம் தேதி) பிறை தென்பட வாய்ப்பே இல்லை. ஆகவே இன்று பிறை தென்பட்டதாக சொல்லும் தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இன்று (08 ம் தேதி) பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுமார் 18 வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே கிண்ணியாவில் தென்பட்டதாக சொல்லப்படும் பிறையை ஏற்றுக் கொள்ள முடியாது.
வெள்ளிக்கிழமை தான் பெருநாள் கொண்டாட வேண்டும்.
என்றெல்லாம் குறித்த தனது உரையில் உரத்த குரலில் கோபப்பட்டு பேசியதை நாட்டு மக்கள் நன்கறிவர்.
ஆனால் இன்று…..
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கும், கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கும் இடையில் ஏற்பட்ட பிறை பிரச்சினை தொடர்பான ஒரு மஷுரா கொழும்பில் நடத்தப்பட்டது.
அந்த மஷுராவின் பின்னர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை ஷவ்வால் மாத பிறை தொடர்பான தனது இறுதி முடிவை வெளியிட்டுள்ளது.
அதில்…
கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது உறுதிபடக் கூறப்பட்டது.
பிறை காணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மிய்யதுல் உலமாவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் ஸ்கிரீ்ன ஷாட்.
இந்த தீர்மானத்தினைப் பார்க்கும் போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்பதை நாம் அறியக் கிடைக்கின்றது.
ஜம்மிய்யதுல் உலமா சபை பிறை விஷயத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்துடன் எப்படியெல்லாம் விளையாடியுள்ளது என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
வியாழன் பெருநாள் கொண்டாடியதும் சரி, வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரிதான்.
17.08.2013 அன்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையும், கிண்ணியா உலமா சபையினரும் சேர்ந்து எடுத்த தீர்மானத்தின்படி வியாழன் பெருநாள் கொண்டாடிதும் சரி, வெள்ளிக்கிழமை பெருநாள்கொண்டாடியதும் சரி என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த முடிவு தெளிவாக வேண்டுமென்று தங்கள் பிழையை மறைத்துக் கொள்வதற்காக பிழையை ஒத்துக் கொள்ள முடியாமல் எடுத்த முடிவாகும்.
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
08 ம் தேதி பிறை தென்படவில்லை. தென்பட்டதாக சொல்லப்படும் செய்தியும் பரப்பப்படும் செய்திகளும் பொய்யானவை. பிறை பார்த்த தகவலை ஏற்றுக் கொண்டு வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும் கிண்ணியாவில் பிறை தென்படவில்லை என்றும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பிறை பற்றி வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அடித்துக் கூறினார்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
08 ம் தேதி பிறை பார்க்கப்பட்டது உண்மை. அதனடிப்படையில் பெருநாள் கொண்டாடியது சரியானது. (அவர்கள் யாரும் தவ்பா செய்ய தேவையில்லை).
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
இன்று பிறை தென்பட வாய்ப்பே இல்லை என்று 18 வானியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். வெரும் 14 நிமிடங்கள் மாத்திரம் தான் பிறை தெரியும். அப்படியிருக்க கிண்ணியாவில் பிறை பார்த்ததாக சொல்லப்படும் செய்தி பொய்யானதாகும் பிறை பார்க்க வாய்ப்பே இல்லை. ஆகவே அந்தப் பிறையை நம்பி நோன்பை விட்டவர்கள் இப்போதே நோன்பை பிடித்துக் கொள்ளுங்கள்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
கிண்ணியாவில் பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட தகவல் உறுதியானது அதனடிப்படையில் பெருநாள் கொண்டாடியவர்கள் சரியாகவே செய்தார்கள். (அப்படியானால் வியாழக்கிழமை நோன்பை விட்டவர்கள் மீட்டிப் பிடிக்கத் தேவையில்லை)
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
இன்று பிறை தென்பட வாய்ப்பே இல்லை என்று 18 வானியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
கிண்ணியாவில் பிறை தென்பட்ட செய்தி உண்மையானது. அப்படியானால் 18 வானியலாளர்கள் பொய் சொல்லியுள்ளார்கள். இனிமேலும் இந்த 18 வானியலாளர்களையும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நம்பக்கூடாது.
குறிப்பாக ஜம்மிய்யதுல் உலமாவை காப்பாற்ற பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய “ஆகில் அஹ்மதை” உலமா சபை 17 ம் தேதி கூட்ட முடிவின் மூலம் பொய்யர் என்று ஒத்துக் கொண்டுவிட்டது.
இரண்டில் எது சரியானது? உண்மையானது?
கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013. ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது.
பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர்எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை பெருநாள் எடுத்தவர்களை வழிகேடர்கள் தவ்பா செய்ய வேண்டும் என்றெல்லாம் ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அன்று தவ்பா செய்யச் சொன்னவர்கள் இன்று தவ்பா தேவையில்லை. கிண்ணியாவில் பிறை காணப்பட்ட செய்தி உண்மைதான் என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இது எப்படி சாத்தியமாகும்?
ஷவ்வால் மாதத்திற்கு இரண்டு தலைப் பிறைகளா?
வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி. வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தற்போது அறிவித்துள்ளது. இது தவறான செய்தியாகும்.
காரணம் இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.
ஏன் என்றால் எந்தவொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான் எந்த மாதத்திற்கும் இரண்டு தலைப்பிறைகள் கிடையவே கிடையாது.
கடந்த 08 ம் தேதி பிறை பார்த்தவர்கள் அதனடிப்படையில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடினார்கள். இது சரியானது என்று ஜம்மிய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. இது சரியென்றால் ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08ம் தேதி ஆரம்பிக்கும் ஆகவே அதுதான் தலைப் பிறை.
ஆனால் 09 ம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரிதான் என்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. 09 ம் தேதி பெருநாள் கொண்டாடியது சரியென்றால் 09 ம் தேதி தான் ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை ஆரம்பிக்கும். ஆகவே அதுதான் தலைப் பிறையாக இருக்க வேண்டும்.
ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா? அல்லது 09 ம் தேதியா?
இப்போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை தெளிவாக ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை எதுவென்பதை குறிப்பிட வேண்டும். கிண்ணியா உலமா சபையை திருப்திப்படுத்துவதற்காக இரண்டும் சரியென்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள்.
அல்லாஹ்வின் மார்க்க அடிப்படையில் எந்த நாளை ஷவ்வால் தலைப் பிறையாக ஏற்கப் போகின்றார்கள்?
08 ம் தேதி வியாழக்கிழமை தலைப் பிறை ஆரம்பிக்கின்றதா? அல்லது 09ம் தேதி வெள்ளிக்கிழமை தலைப் பிறை ஆரம்பிக்கின்றதா?
இந்தக் கேள்விக்கு அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பதில் சொல்லியே தீரவேண்டும்.
மார்கத்தில் விளையாடும் ஆலிம்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடி தலைப் பிறை தங்கள் தீர்மாணத்தின் அடிப்படையில் எப்படியும் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடி செயல்படும் ஆலிம்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் ஆலிம்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே! (35:28)
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள் ஆலிம்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் இந்த திருமறை வசனத்தின் படி மாரக்கத்தில் விளையாடி தங்கள் மனோ இச்சைப்படி தீர்ப்பு சொல்லும் இவர்கள் மார்க்க அறிஞர்களா? ஆலிம்களாக இருப்பதற்கு தகுதி படைத்தவர்களா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
சம்மாந்துறை TJ
0 comments:
கருத்துரையிடுக